Lord Siva

Lord Siva

Thursday 26 January 2012

தாய்ப்பால்… தாய்க்குப் புதிய நன்மை!

Posted on Jan 26,2012,By Muthukumar
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.
அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.

No comments:

Post a Comment